Tuesday, 7 June 2011

அழிவின் விளிம்பில் பவள பாறை

வாஷிங்டன் : ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. வேர்ல்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் (டபிள்யூ.ஆர்.ஐ), அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன், உலக மீன்நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப்பாறைகள் குறித்த மெகா ஆய்வை நடத்தின. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்:

வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது. கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன்பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவையும் பவளப்பாறை அழிவுக்கு முக்கிய காரணங்கள்.
இதே நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் 90 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விடும். 

2050க்கு பிறகு பவளப்பாறைகள் இருந்ததற்கான சுவடுகூட இருக்காது. பவளப் பாறைகளை வாழ்வாதாரமாக கொண்டு கடலில் வாழும் ஏராளமான நுண்ணுயிர்களும் இதனால் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் அழிவதால் கடல் மாசுபாடு அதிகரித்து மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையை மாற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இவற்றின் பாதுகாப்பு சாட்டிலைட்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. கடல் மற்றும் பவளப்பாறைகளின் வளத்தை பாதுகாக்க மாற்று வழியாக, விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதை உணர்வதன் மூலம் பவளப்பாறைகள் மட்டுமின்றி கடல் வளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

உருகுதே உருகுதே பூமி.......

வாஷிங்டன் : பூமிப் பந்தின் உள்பகுதி உருகத்தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பூமியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 

ஆராய்ச்சியில் தெரியவந்த தகவல்கள்:

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, பூமியின் ஆழ்மைய பகுதியும் உருகத்தொடங்கி உள்ளது. பூமியின் இயக்கத்துக்கு தேவையான மின்காந்த அலைகள் இப்பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இதன் விட்டம் சுமார் 2,400 அடி. நிலா அளவுக்கு பெரிதானது. 

இது மிக மிக கடினமானது. இப்பகுதியை சுற்றி வெளிப்புறம் இரும்பு, நிக்கல், அலாய் உள்ளிட்ட பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள, பிரகாசமான போர்வை போன்ற உலோகக்கலவை திரவ நிலையில் உள்ளது.  இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இப்பகுதியில் கன்வெக்ஷன் முறையில் வெப்பம், மற்றும் குளிர்தல் நிகழ்வு மாறிமாறி நடைபெறும். 

சீரான கன்வெக்ஷன் பூமி சுழற்சியை பாதிக்காது. இடர்பாடுகளால் கன்வெக்ஷன் முறையில் ஏற்படும் பாதிப்பு இப்பகுதியில் வெப்பத்தை அதிகரித்து பாதிப்படையச்செய்யும். இதனால் அங்கிருந்து வரும் மின்காந்த அலைகள் பாதிக்கப்பட்டு பூமி சுழற்சி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும்.

அழிவின் விளிம்பில் நைட்டிங்கேல்.......

லண்டன் : பறவைகளில் மிகவும் அரிதானது நைட்டிங்கேல். வசீகர குரல் கொண்டது. இதன் அழகையும் குரலையும் வர்ணித்து இங்கிலாந்து கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய கவிதை உலகப் புகழ் பெற்றது. இந்த அரிய பறவையினம் அழியும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் 30 ஆண்டுகளில் இது இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியாகி உள்ளது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுவதாவது: கடந்த 40 ஆண்டுகளில் நைட்டிங்கேல் பறவை இனம் 90 சதவீதம் அழிந்து விட்டது. காடுகள் அழிக்கப்படுவதும் அதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதும் இதற்கு முக்கிய காரணம். இதுதவிர, மன்ட்ஜாக் எனப்படும் காட்டு மான் வகைகளாலும் நைட்டிங்கேல் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இவை இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு கடந்த 1925ம் ஆண்டு வாக்கில் இடம் பெயர்ந்தவை. நைட்டிங்கேலின் கூடுகளை இவை அழித்துவிடுகின்றன. 

இதன் காரணமாக நைட்டிங்கேல் பறவையினம் மெல்ல அழிந்து வருகிறது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நைட்டிங்கேல் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.