Thursday, 21 July 2011

மார்பக புற்றுநோயை தடுக்கிறது சூரியஒளி


டொரன்டோ: தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை.

இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

அபூர்வ பச்சோந்திகள்


நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் அபூர்வ வகையை சேர்ந்த பல விலங்கினங்களும் வசித்து வருகின்றன. அவற்றுள் சிங்கவால் குரங்கு, காட்டுப் பூனை, வரையாடுகளும் அடங்கும். முன்பெல்லாம் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே விலங்கினங்களை காண முடியும் என்ற நிலை மாறி இப்போது மலைஅடிவாரத்திலேயே விலங்குகளை காண முடிகிறது. மேலும் இங்கு நிறம் மாறும் அபூர்வ பச்சோந்திகளையும் காணலாம். தலையணை பச்சையாற்றின் கரைகளில் உள்ள பாறை இடுக்குகளில் கூர்ந்து கவனித்தால் பச்சோந்திகள் நமக்கு காட்சி அளிக்கும். சில நிமிடங்களிலேயே வெவ்வேறு நிறங்களுக்கு மாறும் பச்சோந்திகளை சுற்றுலா பயணிகள் பார்த்து வியப்படைகின்றனர்.